நந்திவர்மன் மீது பாவலர்களின் பாமாலை
வரும்பயன் கருதாவான்வரவு
பாவலர். இரா. செம்பியன்
குமுகாய கேடுகளைக் களைவ தொன்றே
கொள்கைஎன கொண்டியங்கும் நந்தி வர்மன்
எமனாகும் மேநிலையி லிருந்து கொண்டே
இழித்தொழிலை இயற்றுபவர் யாரே யாயின்
நமக்கிந்த வீண்வம்பே எதற்கென றெண்ணி
நல்லவர்போ லொதுங்கியிவர் போவ தில்லை
அமைதிதவழ் தோற்றமுடன் உலவு கின்ற
அருமைநண்பர் நந்திவர்மன் புயலே யாவார்!
மக்கள்தொண் டென்கின்றப் போர்வைக் குள்ளே
மறைந்திருக்கும் குறும்பர்களைப் பிடித்தி ழுத்து
செக்கிலிட்ட எள்ளெனவே பிழிந்தெ டுத்து
செய்திகளை ஊரறியச் செய்ய வல்லார்
திக்கற்றார்க் காதரவா இருப்போ மென்ற
தௌ¤வான சிந்தனையில் திகழு மின்னார்
எக்கொடுமை எங்கதனைக் கண்ட போதும்
எழுதுகின்றச் சொற்களெல்லா முயிர்பெற் றோடி
இன்னலுறு மக்களுக்குத் தொண்டு செய்யும்
பழுதகற்றிப் பண்படுத்திக் குமுகா யத்தின்
பயன்பெருகச் செய்கின்றப் பணி மேற் கொள்ளும்
கழுத்தறுப்பார் சிலரிங்கே அமைச்ச ராகி
காந்தீயம் பேசுகின்ற கொடுமைக் கண்டு
இழுத்தவரை சட்டத்தின் முன்நி றுத்தி
ஏழைகளுக் காதரவாய் குரல்கொ டுக்கும்
பருப்புரைசை மதயானை நந்தி வர்மன்
பைந்தமிழா லறம்பாட சிதையி லேறி
எரிதழலைத் தழுவிநறுந் தமிழோ டொன்றி
இருக்கின்றான் கலம்பகத்தின் தலைவ னாக!
அருஞ்செயல்கள் புரிந்தவர்கள் உலகில் யாரும்
அழிந்தார்க ளென்றதொரு வரலாரில்லை!
வரும்பயனைச் சீர்தூக்கா துதவி செய்து
வாழ்பவரே வான்வரவிற் கொப்பா வாரே.