இதயத் திருப்பவள் இன்பத்தமிழே
நந்திவர்மன்
தாயகமே என்னுயிரை தந்துன் புகழினை
தரணியில்நான் காத்திடுவேன், தளிருடற் பெண்ணிடம்
போயகநா னூற்றினையா புரட்டிப் பார்ப்பேன்?
பொழுதெல்லாம் பெண்மடியிலா பொருந்திக் கிடப்பேன்?
நாயகனாய் நானிருந்து நங்கை ஒருத்தியின்
நாற்றமேனிச் சுகத்தினையா நயந்து இருப்பேன்?
தூயவோர் கொள்கையினை துணிந்து சொல்வேன்!
துஞ்சிடவும் அஞ்சிடாமல் தொண்டினை தொடர்வேன!?"
காலச்சுழல் கைவரிசையை காட்டிடும் என்றே
கடுகளவும் எண்ணாமலா கட்டழ கியென்று
கோலமயில் ஒருத்தியிடம் மனத்தை கொடுப்பேன்?
கொஞ்சுமிளமை கொஞ்சநாளென குறித்து வைப்பேன்!
நீலவிழியில் சொர்க்கத்தை நிச்சயம் காணேன்!
நெஞ்சணையை மங்கைக்கோர் பஞ்சணை ஆக்கேன்.
ஏலங்குழலாள் இருப்பதற்கென இதயம் இடமிலை,
என்னுயிராய் தாயகமே என்றும் இருப்பாள்"
தமிழ்மொழியே நிலைத்திருந்து தன்னுணர் வூட்டுவாள்,
தமிழ்நாட்டின் நிலைமாற்ற தளர்ச்சி ஓட்டுவாள்,
அமிழ்தூட்டி வளர்த்தவென்றன் அன்னை தன்னிலும்
அன்னவளே என்னகத்தை ஆளுகிற தெய்வம்,
குமிழ்சிரிப்பால் கொள்ளையிடும் குமரிகள் உறவை
கொஞ்சமுமே விரும்பிடாமல் குளிர்தமிழ் அழகை
இமிழ்கடல்சூழ் தமிழ்நிலத்தின் இழந்த புகழை
இந்நிலத்தில் மீட்டிடவே இடைவிடா துழைப்பேன்!"
நெருக்கடி நிலைக் காலத்தில் முரசொலி