பாவேந்தர் நினைவேந்தல்
நந்திவர்மன்
ஆண்டவன் புகழினை, அன்னை நாட்டினை
ஆண்டவர் திறத்தினை அடுபோர்க் களத்தில்
மாண்டவர் மறத்தினை, மன்னர் அருகிருந்(து)
மாதரார் தனத்தினை; மயக்க நினைப்பினை
தூண்டவே பாடினோர் தொகைதான் பெரிது
தூய்தமிழ் நிலைகண்(டு) துடித்த உணர்வில்
மூண்ட விடுதலை முழக்கம் தன்னை
முதலில் முழக்கிய முத்தமிழ்க் கவியார்?"
நாட்டைப் பாடிடார்; நலிவைச் சாடிடார்
நற்றமிழ் மொழியின் நனிபுகழ் விளம்பும்
பாட்டை எழுதிடார்; பகுத்தறி வொளிதரும்
பழக்கம் பெற்றிலார்; பாவலர் களானார்.
பூட்டை உடைப்பீர்; புதுமை காண்பீர்
புரட்சி விளைப்பீர்; புத்துல கமைப்பீர்
ஏட்டை எடுத்தால் எண்ணுவீர் நாட்டை
என்றே ஆக்கிட எழுதிய கவியார்?"
புதுமை மணக்கும் புரட்சிக் குயில்தென்
புதுவை தந்த புலமைச் சான்றோர்
பதுமை போலுநம் பழந்தமிழ்க் குடிகளை
பாயும் புலிகளாய் பாட்டால் மாற்றிய
பொதுமைக் கவிஞன் புறப்பட்டிராவிடில்
புரட்சித் தமிழகம் பூத்து இருக்கமோ?
முதுமைத் தமிழன் முறுக்கோ டெழுந்து
முத்தமிழ் வாழ்கென முழங்கி இருப்பனா?
முடங்கிக் கிடந்தோர் முத்தமிழ் வெல்கென
முழக்கம் எழுப்பி மொழிப்போர் தன்னை
தொடங்கி நடாத்தும் துணிவைத் தந்ததார்?
தூய்தமிழ் மொழியின் துன்னலர் அலறிட
அடங்கிக் கிடந்தோர் ஆர்த்தெழச் செய்த
அரிமாக் கவிஞன் அரும்புகழ் நிலைக்க!
படங்களில் பாக்களில் பசுந்தமிழ் நெஞ்சில்
பாரதி தாசனார் பாங்குறத் துயில்க!"
23.05.1970 மாலைமணி நாளேடு.