நாவேந்தர் அண்ணா நினைவேந்தல்

நந்திவர்மன்

விழிநீராலே நோயினையே விரட்டிடுதல் முடியுமென்றால்
வேண்டுமட்டும் சொரிந்திருப்பேன் வியன்தமிழில் கவிதைகளை
பொழிவதனால் பிணிக்கொடுமை போமென்றால் கோடிகோடிப்
பாடல்களைக் குவித்திருப்பேன் பாசமிகு அண்ணனையே
அழிவினின்று காத்திடவே அளித்திடுக உயிரென்றால்
அகமகிழ்ந்து அளித்திருப்பேன் அவன் நோயை எனக்களிக்கும்
வழியிருந்தால் பெற்றவனை வாழ்ந்திருக்கச் செய்திருப்பேன்
வழியில்லை அழிந்து விட்டான் வார்த்தையின்றி தவிக்கின்றேன்.

என்னுயிரைத் தந்தவனை எழுப்பிடவே முடியுமென்றால்
என்தலைவன் கல்லறையில் என்னுயிரை வைத்திருப்பேன்
என்னுடலினைச் சிதைத்தவனின் எழிலுருவம் பெறவியன்றால்
என்னுடலைத் தந்திடுவேன் என்போன்ற இளைஞரெல்லாம்
தன்னுயிரை தன்னுடலை தந்திடவே வேண்டுமெனில்
தமிழ்நாடே திரண்டிருக்கும் தலைவனவன் உயிர்மீட்க
தென்னாட்டின் தனித்தலைவன் திரும்பிவர மாட்டானெனத்
தெரிந்ததிருந்தும் புலம்புகின்றேன் திசையறியா துழல் கின்றேன்

புற்றுநோயை வெற்றிகண்டு புனிதனவன் வாழ்ந்திருக்க
புவியிலில்லை மருந்தென்று புகன்றிட்ட மருத்துவரெலாம்
கற்றும்பய னென்னென்று கடும் மொழிகள் கழறிட்டேன்
கலங்கிட்டேன், தவித்திட்டேன், கண்ணீரை உகுத்திட்டேன்
பற்றுபாசம் கொண்டிருந்த பற்றுக்கோடு இழந்திட்டேன்
பாரினிலே வாணாளெல்லாம் பாழ்நாளே என்றிட்டேன்
முற்றறிந்த அண்ணாவெனும் மூத்தவனை இழந்திட்டதில்
முகம்புதைந்து கலைஞர்தாள் முழுதுமழுது நனைக்கின்றேன்

(அண்ணா மறைந்த நாளன்று எழுதி நெருக்கடி நிலையில் ஆட்சி கலைக்கப்பட்டு அனைவரும் சிறையில் அடைக்கப்பட்ட இரண்டே நாளில் 2.2.1976 ல் முரசொலி நாளிதழில் நந்திவர்மன் எழுதிய கவிதை)